general sir john kotelawala

1979 இல் இலங்கை ஆயுதப் படையினரால், இளம் அலுவலர்களுக்காக உயர் கல்விசார் தகைமைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் உயர் கல்வி நெறிமுறையொன்றை ஏற்படுத்திக்கொடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது.

அதற்கேற்ப, படையணிசார் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் அடங்கிய ஆய்வுக் குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதுடன், அங்கு அவர்கள் தேசிய பாதுகாப்பு கலைக்கழகத்திற்கும் (National Defence Academy) விஜயம் செய்தனர். நாடு திரும்பியதும் ஆய்வுக் குழுவினால் பாதுகாப்புக் கற்கைகள் தொடர்பான பட்டமொன்றை வழங்குவதற்கான பாதுகாப்புக் கலைக்கழகத்தை உருவாக்கும் ஆலோசனையை முன்மொழிந்தது.

1980 இல் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல, CH, KBE, LLD அவர்கள், உத்தேச பாதுகாப்பு கலைக்கழகத்திற்கு பொருத்தமான இடமொன்றின் தேவைப்பாட்டை புரிந்து கொண்டு, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜே.ஈ.டீ. பெரேரா, VSV, D.Litt. (Honoris Causa), FIBM அவர்களுக்கு, தனது கந்தவலவத்த தோட்டம் எனும் அசையும் மற்றும் அசையாத ஆதனங்களுடனான 48 ஏக்கர் காணியை பாதுகாப்புக் கலைக்கழகத்தை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்யும் தனது எண்ணத்தை அறிவித்தார்.

இந்த அன்பளிப்பானது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் எடுக்கப்பட்டன. இச் சந்தர்ப்பத்தில் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள், ‘ஜெனரல்’ நிலைக்கு தரமுயர்த்தப்பட்டதுடன், 1980 அக்டோபர் 02ஆம் திகதி அவர் இறந்ததன் பின்னர், அவரது பெயரில் கலைக்கழகத்தை பெயரிட்டு அன்னாரை கௌரவிப்பதற்கு அரசாங்கம் மற்றும் படையணி சேவையினர் முடிவு செய்தனர். அதன்படி அது, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கலைக்கழகம் எனப் பெயரிடப்பட்டது.

கலைக்கழகமானது, 1980 அக்டோபர் 11, இராணுவ தினத்தன்று கந்தவலவத்தையில் நடைபெற்ற வைபவத்தின் போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அப்போதய அதிமேதகு சனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் இந் நிகழ்வைக் குறிக்குமுகமாக நினைவுப் படிகமொன்று திறந்துவைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், கலைக்கழகமானது அதன் நிகழ்ச்சித்திட்டங்களை துரிதமாக ஆரம்பிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூளவளங்கள் என்பவற்றைக் கொண்டிருக்கவில்லை.

1981 பெப்பிரவரி மாதத்தின் போது, அலுவலர் பயிலிளவல்களுக்கு மொறட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் முறையே பொறியியல் மற்றும் பௌதிக விஞ்ஞானப் பாடநெறிகளை பயிலுவதற்கு தற்காலிகமான வசதியொன்று ஏற்படுத்தப்பட்டது.

கலைக்கழகமொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்ற சட்டமான 1981 ஆண்டின் 68ஆம் இலக்கமுடைய சேர் ஜோன் கொத்தலாவல கலைக்கழக சட்டம் மற்றும் பின்னர் கொண்டுவரப்பட்ட பல்வேறு திருத்தங்கள் என்பன அடிப்படையாக அமைந்தன. கலைக்கழகத்தின் பெயரும் பின்னர், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.

1986 இல் கொ.பா.ப. முகாமைத்துவ சபையினால், கலைக்கழகமானது பல்கலைக்கழக அந்தஸ்துக்கு தரமுயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டதுடன், பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்திசெய்யும் அலுவலர் பயிலிளவல்களுக்கு பாதுகாப்புக் கற்கைசார் பட்டம் வழங்கப்பட்டன. அதற்கிணங்க, 1988 ஆண்டின் 27ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் கலைக்கழகம் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு தரமுயர்த்தப்பட்டதுடன், அதன் முதலாவது பட்டமளிப்புவிழா 1991இல் நடாத்தப்பட்டது.